தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சிகள்
உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான குடிநீரை விநியோகம் செய்திட வேண்டும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட நிலத்தடி நீர் விநியோகிக்கப்படும் போது எக்காரணம் கொண்டும் ஒகேனக்கல் குடிநீருடன் கலந்து விநியோகம் செய்யக்கூடாது.
ஒகேனக்கல் குடிநீரை ஒருநாளும், நிலத்தடி நீரை மற்றொரு நாளும் விநியோகம் செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு அன்றைய தினம் வழங்கும் தண்ணீர் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செயலர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். பிரதி வாரம் ஒவ்வொரு நாளும் என்ன தண்ணீர் வழங்கப்படுகிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நிலத்தடி நீர் பருகினால் உடல் நிலை பாதிக்கும் நிலை ஏற்படுவதால் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதி பெறாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அதனை முறைப்படுத்தி உரிய வரியினை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட வேண்டும். முன் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்புகள் இல்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்திட வேண்டும். பழுதடைந்த அல்லது தேவைப்படும் இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைத்திட ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுழற்சி முறையில் எவ்வித தொய்வுமின்றி சுத்தம் செய்தல் வேண்டும். அனைத்து பொதுமக்களுக்கும் தரமான சுகாதாரமான குடிநீரை விநியோகம் செய்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) மரு.வைத்தியநாதன்,இ.ஆ.ப., உதவி இயக்குநர் (ஊராட்சி) திரு.சீனிவாச சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.முத்துசாமி, மாவட்ட திட்டக்குழு செயலாளர் திரு.மாரிமுத்துராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திரு.சுகேந்திரன் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
தருமபுரி