கர்நாடக அரசு கட்டிய அணையால், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மொத்தம், 17.35 அடி கொள்ளளவு கொண்ட தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மழைக்காலங்களில் கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்றும் திட்டத்தின் வாயிலாக குழாய் இணைப்புகளை ஏற்படுத்தி மொரப்பூர், நவலை, கம்பைநல்லூர், செங்குட்டை, சின்னாகவுண்டம்பட்டி, கடத்தூர், சிந்தல்பாடி பகுதியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதையேற்று கடந்த, 2019 ஜூலையில், கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி ஆய்வுகள் நடத்தப்பட்டு, அரசிடம் வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்தாண்டு பட்ஜெட்டில், 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பின், 400 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில் தென்பெண்ணையாற்றின் முக்கிய கிளைநதியான மார்க்கண்டேய நதியில், கர்நாடக அரசு யார்கோள் என்ற பகுதியில் அணை கட்டியுள்ளது. இதனால், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இது குறித்து, மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாய சங்கத்தலைவர் ஜெயபால் கூறியதாவது: கர்நாடகா அணை கட்டியதால், தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து வராது. இதனால், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் மூலம், ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியாது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட, ஏழு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Tags:
மொரப்பூர்