தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ. நீள ரயில் பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் ரயில் பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தருமபுரி மாவட்ட மக்கள் கடந்த 78 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
தமிழகத்தை சார்ந்த சேர்ந்தவர்கள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர்களாக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே இந்தப் பாதைக்கு சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால், அதன்பின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பணிகள் தொய்வடைந்தன.
2014 ஆம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மருத்துவர். அன்புமணி அவர்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரயில்வே துறை அமைச்சர்களாக பதவி வகித்த சதானந்த கவுடா, சுரேஷ் பிரபு, பியுஷ் கோயலை ஆகியோரையும், ரயில்வே துறை அதிகாரிகளையும் 18 முறை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன்பயனாக தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டித் திட்டம் 2016-17 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சில நிபந்தனைகளுடன் சேர்க்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ரயில்வே துறைக்கு கிடைக்கும் வருவாய் விகிதம் -5.60% ஆக இருக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்தன. இத்திட்டத்தை மத்திய - மாநில கூட்டு முயற்சியில் செயல்படுத்தலாம் என்றும், அதற்கான செலவை தலா 50% என்ற அளவில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதினார்.
ஆனால், அதற்கு தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கமாக வருவாய் விகிதம் எதிர்மறையாக உள்ள ரயில்வே திட்டங்களுக்கான செலவை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அத்தகையத் திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தாது. எனினும், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு அன்புமணி அவர்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்துக்கு ரயில்வே துறை அமைச்சகம் 16.01.2019 அன்று ஒப்புதல் கொடுத்துள்ளது.
மொரப்பூருக்கும், தருமபுரிக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் 1906 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டு வரை குறுகியப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்பின் இப்போது தான் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. பின்னர் நிலம் கையகப்படுத்தி எல்லை கற்களும் நடப்பட்டது, பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். செந்தில் குமார் அவர்களின் தொடர் முயற்சியால் மொரப்பூர் முதல் தருமபுரிக்கு இரயில்பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதை அமைப்பதற்கு தொடர் முயற்சியாக ஆட்சியர் மற்றும் இரயில்வே கட்டுமான தலைமை பொறியாளர் திரு. ராஜகோபாலன் அவர்களுடன் ஆலோசித்த தருமபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். செந்தில்குமார் அவர்கள் நகரத்தில் வரும் 8 Km ரயில் பாதைக்கு மாற்று பாதை நிலஅளவீட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றார்.