நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தருமபுரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ.80.64 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள்.

தருமபுரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 130 பயனாளிகளுக்கு ரூ.32.5 இலட்சம் நிதியுதவியும், தாலிக்கு தங்கம் தலா 8 கிராம் வீதம் ரூ.47.684 இலட்சம் மதிப்பிலான 1040 கிராம் (130 பவுன்) தங்கமும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10
பயனாளிகளுக்கு தலா ரூ.4,474/- வீதம் ரூ.44,740/- மதிப்பிலான தையல் இயந்திரமும், திருநங்கைகளுக்கு புதியதாக 10 நலவாரிய அடையாள அட்டையும், என மொத்தம் 150 பயனாளிகளுக்கு ரூ.80.64 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் வழங்கினார்.

பின்னர் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் பேசியதாவது: தமிழகத்தில் பெண்கள் கல்வியில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக கடந்த 1989-ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள் திருமண நிதி உதவித் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் ரூ.5000 நிதியுதவி அளிக்கப்பட்டு வந்த இந்த திட்டத்தில் பின்னர் 2009-ல் ரூ.25,000 என உயர்த்தி வழங்கப்பட்டது. இதனால் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கமும் சேர்த்து கடந்த ஆட்சியில் நடைமுறை படுத்தப்பட்டது. 4 கிராம் தங்கம் வழங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் 8 கிராமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான நிதி உதவி அளிக்கப்படவில்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக திருமண உதவித் திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை. இவ்வாறு 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் தமிழகத்தில் நிலுவையில் உள்ளது. திருமணம் செய்வோருக்கு உடனடியாக உதவிடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த உதவித்திட்டம் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது வேதனை அளிக்கிறது. 

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் நிலுவை விண்ணப்பங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது திருமண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்தில் உள்ள அக்குழந்தைகளின் நலன் காக்க வைப்புத் தொகை அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. 23 ஆயிரம் பயனாளிகளுக்கான இந்த தொகை முதிர்வடைந்த நிலையில் வழங்கப்படாமல் உள்ளது. இதனையும் விரைந்து வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


இளம் வயது திருமணங்கள் செய்வதால் பெண்களின் கல்வி, எதிர்காலம், உடல் நலன் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளம்வயது திருமணங்களை தடுக்க அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து இளம் வயது திருமணங்களை தடுக்க திருமணம் செய்துகொள்வோர், அதில் பங்கேற்போர் என அனைவர் மீதும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிராம அளவில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இளம் வயது திருமணங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் ஜூன் வரை 35 இளம் வயது திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் இடவசதியின்மை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், விரைந்து இந்த மையம் அரசு கட்டிடத்தில் இயங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொரோனா ஊரடங்கின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4000 நிவாரணம் தமிழக அரசு அறிவித்து வழங்கியது. இந்த நிதியுதவி கேட்டு திருநங்கைகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு அந்த நிவாரணத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதற்காக திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு காப்பீடு மற்றும் பராமரிப்புத் தொகை வழங்கும் திட்டமும் தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் பேசினார்.

முன்னதாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.48 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட, சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்.


பின்னர் நல்லம்பள்ளி வட்டம் கோயிலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்படும் தொட்டில் குழந்தை மையத்தையும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), திரு.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), திரு.சம்பத்குமார் (அரூர்), மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.ராமமூர்த்தி, தருமபுரி உதவி ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இஆப.,
துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பூ.இரா.ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, உதவி ஆட்சியர் (பயிற்சி)திரு.கௌரவக்குமார்,இஆப., துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி பூமா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி நாகலட்சுமி,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.சிவகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.