ஒகேனக்கலை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு.


தமிழகத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒகேனக்கல் சுற்றுலா தலமும் ஒன்று. தமிழகத்திற்குள் காவிரி ஆறு தடம்பதித்து, தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும் ஒகேனக்கல் அருவிகள் தென்னிந்தியாவின் நயாகரா என்று போற்றப்படுகிறது.


இங்குள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி பார்ப்போரை தன்வசப்படுத்தும். இயற்கை எழில்மிக்க இந்த சுற்றுலா தலத்திற்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


தற்போது கோவிட் சூழ்நிலையால் கடந்த ஓராண்டுக்கு மேல் ஒகேனக்கல் சுற்றுலா தலம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் இன்று ஒகேனக்கலில் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது அருவி பகுதிகள், பரிசில் துறைகள், பூங்காக்கள், தமிழக சுற்றுலா மேம்பாட்டு கழக விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தனர்.


இந்த குழுவில் சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக‌ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சி தலைவர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.வைத்திநாதன், தருமபுரி உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், வன பாதுகாவலர் தீபக்.எஸ்.பல்கி, மாவட்ட வன அலுவலர் கே.ராஜ்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.


கொரோனா சூழலில் சுற்றுலா பயணிகள் வராத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பரிசல் ஓட்டிகள், சமைப்பவர்கள், எண்ணை தேய்ப்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் இந்த குழுவினர் கேட்டறிந்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form