கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வகை 2-ல் உள்ள தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.
- பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
- அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.
- மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.
- அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் அதன் செயல்பாடுகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- வீட்டு வசதி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும்.
- அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.
- வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-1-ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணைய வழியாக மணமகன் /மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். வகை-1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும்.
- திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.