கொரோனா ஊரடங்கு காலத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 7.50 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை போலீசார் பெட்ரோல் ஊற்றி அழித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக மதுபானங்கள் தமிழகத்திற்கு மதுபானங்கள் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி மற்றும் மது விலக்கு பிரிவு சேலம் மண்டல எஸ்பி மகேஷ்குமார் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மது கடத்தலை தடுக்க, மது விலக்கு பிரிவு டிஎஸ்பி சங்கர் தலைமையில் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான 5 மாதத்தில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மதுபானங்கள் கடத்தி வரப்பட்டதாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் 4,754 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்த நிலையில், கடத்தலில் ஈடுப்பட்டதாக 146 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலமான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் மதுபானங்கள் கடத்தப்பட்டதாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,918 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மற்றும் வெளிமாநில மதுபானங்களை நேற்று கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீ வைத்து அழித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட மது விலக்கு ஆயத்தீர்வை துணை ஆட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ குமார் உள்ளிட்ட போலீசார் 4754 பாட்டில்களில் இருந்த 950 லிட்டர் கொண்ட மதுபானங்களை பெத்ததாளப்பள்ளி மலை அடிவாரத்தில் தீ வைத்து அழித்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ 7 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:
கிருஷ்ணகிரி