கும்பகோணத்தை சேர்ந்தவர் நாசர், 38, மொத்த காய்கறி வியாபாரி. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு ஊழியர்களை வேனில் அனுப்பி, காய்கறி எடுத்து செல்வார். லாரியில் லோடுமேன்களாக கும்பகோணம், திருவிடைமருதூரை சேர்ந்த ராஜேஷ், 26, மோகன்ராஜ், 27, ஜெயக்குமார், 36; கணக்காளராக முத்துகுமரன், 32, டிரைவராக காமராஜ், 25, ஆகியோர் பணிபுரிந்தனர்.
இதில் ராஜேஷ், பணம் இரட்டிப்பாக்கும் கும்பலை தனக்கு தெரியும், 500 ரூபாய் நோட்டுக்களாக கொடுத்தால், 100 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி, கூடுதல் பணம் பெறலாம் என, நாசரிடம் கூறியுள்ளார். இதை நம்பி, நண்பரான கோயம்புத்தூரில் டிராவல்ஸ் நடத்தும் சந்திர குமாரிடம், 80 லட்சம் ரூபாயை பெற்று, ஊழியர்களிடம் நாசர் கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் கடந்த, 2ம் தேதி வேனில் கிருஷ்ணகிரி சென்றனர்.
காரில் வந்தவர்களிடம், 70 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் பெற்றுத்தருவதாக கூறி, அவர்களை அழைத்து சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில், போலீசார் வருவதாக கூறி, அவர்களை திசை திருப்பிவிட்டு அந்த கும்பல் தப்பியது. இதையறிந்த நாசர், சந்திரகுமாருக்கு தெரிவித்தார். இதுகுறித்து சந்திரகுமார் புகாரின்படி, மகாராஜகடை போலீசார் விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசிய ராஜேஷ், மோகன்ராஜ், ஜெயகுமார், முத்துகுமரன், காமராஜ், நாசர் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். காரில் பணத்துடன் தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.