தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்ட மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சமூகநல துறை சார்பில் ரூ.48 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தில் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொட்டில் குழந்தை திட்ட மையத்தினை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகளை அமைக்குமாறும், இந்தத் தொட்டில்
குழந்தை திட்ட மையத்தில் குழந்தையை விட்டுச் சென்றதும், தொட்டிலில் காணப்படும் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கும் வகையில், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்களும் அச்சிடப்பட்ட பலகை அமைக்குமாறும், குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்கள், தயவுசெய்து குழந்தைகளைச் சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகள் மற்றும் முட்புதர்களில் வீசிச் செல்லாமல், இந்தத் தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம். தொட்டில் குழந்தை திட்ட மையத்தில் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், சிறப்பாகப் பராமரித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காப்பகங்களில் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், அரசின் வழிகாட்டுதலின் படி முறையாக குழந்தை தேவையானோருக்கு தத்துக் கொடுக்கப்படும்.
இந்நிகழ்வின் போது மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) திருமதி.நாகலட்சுமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, குழந்தைகள் பிரிவு தலைவர் மரு.ரமேஷ் பாபு, கண்காணிப்பு மருத்துவர் மரு.சிவக்குமார், மரு.பாலாஜி மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
தருமபுரி