கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பர்பிள் லைன், கிரீன் லைன் என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர எல்லோ லைன் என்ற பெயரில் ஆர்.வி.சாலையில் இருந்து பொம்மசந்திராவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இது மூன்றாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை வரும் மார்ச் 2022ல் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொம்மசந்திராவில் இருந்து தமிழகத்தின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் பயன்பாட்டை நீட்டிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஓசூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எம்.பி செல்லகுமார், விரைவில் பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும்.
இதுகுறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். அவரும் இதுபற்றி கர்நாடகா - தமிழக அரசுகளுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ், பாஜக எம்.பி டேஜுஸ் சூர்யா ஆகியோரை சந்தித்து பேசினேன். மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் மற்றும் அலுவலர்களை சந்தித்து பேசி திட்டத்தை விரைவாக தொடங்க ஏற்பாடு செய்துள்ளேன்.
அடுத்ததாக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக எம்.பி செல்லகுமார் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் இருந்து பெங்களூருவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை, கல்வி, வியாபாரம், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக சென்று வருகின்றனர்.