தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு தமிழகம் மட்டும் அல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி, தொடர் அருவி ஆகிய அருவிகளை பரிசல் மூலம் சென்று கண்டு ரசித்து மெயின் அருவியில் குளித்து மகிழ்வர்.
அதே போல், இங்கு சமைக்கும் மீன் உணவை ரசித்து சாப்பிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு, நேற்று ஊரங்கு தளர்வு அதிகரிக்கப்பட்டது. இதில் கோயில்கள், சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இன்னும் சில சுற்றுலா தலங்களுக்கு இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டது. சுற்றுலா தலத்திற்கு செல்ல தளர்வு அறிவிக்கப்பட்டதால் இன்று உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமான ஒகேனக்கல்லுக்கு வர துவங்கினர்.
ஆனால் ஒகேனக்கல்லுக்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஒரே இடத்தில் குளித்தால் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்காததால் ஒகேனக்கல்லுக்கு முன்னரே உள்ள சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்படுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.